கடலூர்: கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக இருக்கும் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறை கேப்பர் குவாரி மலைப்பகுதியில் உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஜெயிலராக செந்தில்குமார் உள்ளார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி உதவி ஜெயிலர் மணிகண்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் கைதிகள் அறையில் காவலர்களுடன் சோதனையில் ஈடுபட்டார். அப்போது சென்னை எண்ணூர் கைதி தனசேகரன் அறையிலிருந்து செல்போன் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மணிகண்டனின் வழக்கறிஞர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.
அதில் சிறைச்சாலையில் உள்ள தனசேகரனிடம் செல்போன் பறிமுதல் செய்ததாக உதவி ஜெயிலர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இது பொய்யான குற்றச்சாட்டாகும். வேண்டுமென்றே இவர் அது போல் செய்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி இரு குழந்தைகள் அப்பா அம்மா ஆகியோருடன் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள உதவி ஜெயிலர் குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று(ஆக.28) அதிகாலையில் 3 மணி அளவில் மர்ம கும்பல் மணிகண்டனின் வீட்டு சமையல் அறை கதவை திறந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடியுள்ளனர்.
சத்தம் கேட்டு எழுந்து பார்த்த மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வர வரவைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று திரும்பியது.
கைரேகை நிபுணர்கள் சமையலறை கதவுகள், வெளிப்புற பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மற்றும் அங்கு கிடந்த பெட்ரோல் பாட்டில்களில் உள்ள கைரேகைகளை பதிவு செய்து எடுத்துச் சென்றனர். எண்ணூர் கைதி தனசேகரனிடம் செல்போன் பறிமுதல் செய்ததால் ஆத்திரத்தில் அவர் கூலிப்படை மூலம் இதை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உதவி ஜெயிலர் குடியிருப்பில் பெட்ரோல் ஊற்றி குடும்பத்தினரை எரிக்க முயற்சி செய்தது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.