ஹைதராபாத்: ஹைதராபாத் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் நேற்று சந்தித்து பேசினார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வாரங்கல் பொதுக்கூட்டத் தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் தனது துணைவியாருடன் ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜே.பி.நட்டா சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சந்தித்தார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் வரை பேசினர்.
இதுகுறித்து மிதாலி ராஜிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மட்டுமே பதில் அளித்தார். என்றாலும் இவர் விரைவில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிதாலி ராஜ் சந்திப்பை தொடர்ந்து நேற்று இரவு ஜே.பி.நட்டாவை தெலுங்கு திரையுலக இளம் நடிகர் நிதின் சந்தித்தார். இவரும் விரைவில் பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது.
கடந்த வாரம், ஹைதராபாத் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார். தெலங்கானாவில் நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜகமுயன்று வருவதை இந்த சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
தெலங்கானாவில் வரப்போகும் 2024 பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் பாஜக வியூகம் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.