டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் பலி: குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம்

ஓட்டப்பிடாரம்: சிவகாசி பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்த கார் டயர் குறுக்குச்சாலை அருகே திடீரென வெடித்ததால் சாலையோரம் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த தாய், மகன் மற்றும் ஆசிரியை உள்பட மூவர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த பெத்துரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (71). இவரது மனைவி சங்கரேஸ்வரி (62). தம்பதிக்கு கனகதர்மராஜ் (40), சங்கர் (38), ராமர் (35) என 3 மகன்கள் மற்றும் பிரபா என ஒரு மகள். இவர்களில் பிரபாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்தனர்.

தற்போது பிரபா  5 மாத கர்ப்பிணி என்பதால் கட்டுச்சோறு கொண்டு செல்வதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 11 பேர் பெத்துரெட்டிபட்டியில் இருந்து நேற்று அதிகாலை காரில் புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். காரை சங்கர் ஓட்டி வந்தார். மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் பயணித்த சங்கரேஸ்வரி, சாத்தூரைச் சேர்ந்த ஆசிரியை மருதாயி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சங்கர், அவரது குழந்தைகள் பீமஹி (10), பீமன் (7) மற்றும் ராமர் (35), பழனிச்சாமி, கனகதர்மராஜ் (40), அவரது மனைவி முத்துலட்சுமி (35). இவர்களது குழந்தைகள் ஓவிய அரசி (10), நிவித்குரு (7) ஆகிய 9 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த  போலீசார், காயமடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த சங்கர், மதியம் ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மற்ற 8 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.