செனனை : பிரம்மாஸ்திரா படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை இந்த படத்துக்கும் ஏற்பட்டுவிடுமோ என படக்குழு மட்டுமின்றி பாலிவுட்டே கலக்கத்தில் உள்ளது.
பாலிவுட் திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அங்கு ரிலீசாகும் படங்கள் அனைத்தும் வரிசையாக பிளாப் ஆகி வருவதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அங்கு பாய்காட் டிரெண்டும் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இதுவும் படங்களின் தோல்விக்கு பெரும் பங்காற்றி உள்ளன.
சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இதற்கு பாய்காட் டிரெண்டும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமீர்கானின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி அப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் எதிரொலியாக படமும் படுதோல்வி அடைந்தது.
ரிலீசிற்கு தயாரான பிரம்மாஸ்திரா
இந்த சமயத்தில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா நடித்துள்ள ‘பிரம்மாஸ்திரா பாகம் 1’ படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அடுத்த செப்டம்பர் 9-ம் தேதி ரிலீசாக உள்ளது.தென்னிந்திய மொழிகளில் இயக்குநர் ராஜமெளலி வெளியிடுகிறார்.
பிரம்மாஸ்திராவிற்கு வந்த சிக்கல்
இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆலியா பட், என்னை பிடிக்கவில்லை என்றால் என்னுடைய படத்தை பார்க்காதீர்கள் என பேசியுள்ளது தான் தற்போது அப்படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இதே போல் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான அமீர்கானின் பிகே படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சி ஒன்றில் ரன்பீர் கபூர் நடித்திருந்தார். இவற்றை குறிப்பிட்டு இவர்கள் இருவரும் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தை புறக்க வேண்டும் என சோஷியல் மீடியாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சர்ச்சையான போஸ்டர்
இந்த படத்தில் ரன்பீர் கபூர் சிவனின் சக்தி பெற்றவர் என காட்டப்பட்டுள்ளது.பிரம்மாஸ்திரா பட போஸ்டரில் திரிசூலம் ஏந்திய சிவனின் உருவத்திற்கு முன் ஜீன்ஸ் அணிந்த படி கையில் திரி சூலத்துடன் ரன்பீர் கபூர் நிற்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. அதுவும் இந்து கடவுள்களை அவமதிப்பது என சொல்லி சர்ச்சை கிளம்பி உள்ளது.
கோயிலில் ஷு அணிந்தாரா ரன்பீர்?
இதற்கு முன் ஜுலை மாதம் வெளியிடப்பட்ட படத்தின் டிரைலரில் ரன்பீர் கபூர் ஷு அணிந்து கோயிலுக்கு வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டது. இதுவும் சர்ச்சையாக்கப்பட்டது. பிறகு அவர் கோயிலுக்குள் ஷு அணியவில்லை. அந்த காட்சி பூஜா மண்டல் பகுதியில் நடப்பது போன்று எடுக்கப்பட்டது என டைரக்டர்கள் விளக்கம் அளித்த பிறகு அது ஓய்ந்தது.
டிரெண்டான #BoycottBrahmastra
தற்போது ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் #BoycottBrahmastra என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இதனால் படக்குழு கலக்கம் அடைந்துள்ளது. ஆலியா பட்டின் பேச்சு, ரன்பீரின் பழைய சர்ச்சைகளால், லால் சிங் சத்தா படத்திற்கு ஏற்பட்டது போன்ற நிலையை பிரம்மாஸ்திராவிற்கும் ஏற்பட்டு விடுமோ என பாலிவுட்டே கலக்கத்தில் உள்ளது.பிரம்மாஸ்திரா 8 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ரூ.500 கோடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படமாகும். இப்படத்தை மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.