சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 5-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.28-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 5-ம் ஆண்டு தொடங்குகிறது.
இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திமுக மூத்த தலைவர்களும் தமிழக முன்னாள் முதல்வர்களுமான அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி இன்று மரியாதை செலுத்தினார்.
முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முரசொலி அலுவலகத்துக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கட்சி தொண்டர்களையும் சந்திக்கவிருக்கிறார்.
இந்நிகழ்வின்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.