தெப்பகாடு: பணிகாலம் முடிந்து ஓய்வு பெறும் 2 கும்கி யானைகளின் நெகிழ்ச்சி வரலாறு!

தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கபட்டு வந்த முதுமலை மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு கும்கி யானைகளுக்கு வனத்துறை ஓய்வு அளித்துள்ளது. இந்த கும்கி யானைகள் பற்றிய சுவாரஸ்ய பின்னணி இங்கே!
அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எப்படி குறிப்பிட்ட வயதை கடக்கும் போது ஒய்வு அளிக்கபடுகிறோ, அதே போல தமிழகத்தில் வனத்துறை பராமரிப்பில் உள்ள கும்கி யானைகள் மற்றும் பிற வளர்ப்பு யானைகள் 58 வயதை அடையும் அவற்றிற்கு ஓய்வு அளிக்கபடும். அந்த வகையில் முதுமலையில் கும்கி யானைகளாக வலம் வந்த முதுமலை மற்றும் மூர்த்தி ஆகிய யானைகளுக்கு வனத்துறை ஓய்வு அளித்திருக்கிறது.
image
கும்கி முதுமலை
இந்த யானைகளில் 1967 ஆம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில் 5 வயது குட்டியாக பிடிக்கப்பட்ட யானை, முதுமலை. அப்போது முதல் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை வளர்ந்த பிறகு நீண்ட தந்தங்கள், கம்பீரமான உடல் அமைப்பு, பாகன் சொல்லுக்கு கீழ்படுதல் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மிக முக்கிய கும்கி யானையாக முதுமலை மாறியது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை பிடிக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் கும்கி முதுமலை ஈடுபட்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் ஊருக்குள்ள புகுந்த காட்டு யானை இய பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதுமலை கும்கி யானைக்கு அந்த மாநில அரசு விருது வழங்கியும் கௌரவித்திருக்கிறது. என்னதான் பிரமாண்டமாக உருவமாக இருந்தாலும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளோடு கூட முதுமலை யானை மிகவும் அன்பாக பழகும் என அதனை பராமரித்து வந்த முன்னாள் பாகன் மாறன் தெரிவித்துள்ளார். முதுமலை யானையுடன் பணிக்கு சென்ற அனைத்து இடங்களிலும் வெற்றியே தங்களுக்கு கிடைத்துள்ளதாக பெருமிதத்தோடு கூறுகிறார். காட்டு யானைகள் எவ்வளவு மூர்க்கத்தனமாக தாக்க வந்தாலும் தன் மீது அமர்ந்திருக்கும் பாகனுக்கு இந்த பாதிப்பும் ஏற்படாதவாறு முதுமலை பார்த்துக்கொள்ளும் என அவர் கூறியிருக்கிறார். தற்சமயம் வனத்துறை பணியில் 55 ஆண்டு காலம் ஈடுபட்ட முதுமலை கும்கிக்கு தற்சமயம் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
image
கும்கி மூர்த்தி
கும்கி யானை முதுமலை, 4 மாநிலங்களில் உள்ள காட்டு யானைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. ஆனால் கும்கி யானை மூர்த்தியோ கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. 1990களில் இந்த யானையை செய்த செயல்களை கேரளா மற்றும் கூடலூர் பகுதியை சேர்ந்த மக்கள் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். மக்னா யானையான மூர்த்தி கேரளாவில் 10க்கும் மேற்பட்டவர்களை கொன்ற நிலையில், கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இங்கும் 10 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதாக கூறப்படுகிறது.
1998 ஆம் ஆண்டு பெரும் சிரமத்திற்கு இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வனத்துறை மூர்த்தி யானையை பிடித்து முகாமில் சேர்த்தது. அப்போது புளியம்பாறை பகுதியில் இருந்து 5 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட மூர்த்தி யானையை நடக்க வைத்தே வனத்துறை தெப்பகாடு முகாம் கொண்டு சென்றனர். யானை பிடிக்கப்பட்ட போது அதன் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததோடு, அதன் உடம்பிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களும் எடுக்கப்பட்டன. அப்படி மூர்க்கத்தனமாக இருந்த மூர்த்தி யானை தற்சமயம் தெப்பக்காடு முகாமின் மிகவும் சாதுவான யானையாக வலம் வருகிறது.
image
பாகன் இல்லாத நேரங்களில் குழந்தைகள் கூட மூர்த்தி யானை அருகில் சென்று நிற்க முடியும். அந்த அளவுக்கு மனிதர்களோடு மூர்த்தி யானை மிகவும் நெருங்கி விட்டது. காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் கும்கி யானை மூர்த்தி பலமுறை ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. முகாமிற்கு பிடித்து வரும் காட்டு யானைகளை சாந்தப்படுத்தும் பணியிலும் மூர்த்தி அணை ஈடுபடுத்தப்படும். வனத்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றிய மூர்த்தி யானைக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
தற்சமயம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள மூர்த்தி மற்றும் முதுமலை ஆகிய இரண்டு கும்கி யானைகளுக்கும் இனிமேல் முகாமில் எந்த பணிகளும் வழங்கப்படாது என வனத்துறை தெரிவித்து இருக்கிறது. வழக்கம் போல பாகன்கள் இந்த இரண்டு யானைகளையும் பராமரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு யானைகளுக்கு 29.08.2022 அன்று தெப்பக்காடு முகாமில் வைத்து விழா நடத்தி வனத்துறை கௌரவிக்க உள்ளது.
– மகேஷ்வரன் – கூடலூர், நீலகிரிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.