கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார். அதன்படி இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் ஆயிரம் பேர் ஓ.பி.எஸ் பண்ணைவீட்டிற்கு வந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஜூன் 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு முறையாக நடக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தற்காலிக அவைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான முன்மொழிவை நான் செய்யவேண்டும். அதை இணை ஒருங்கிணைப்பாளர் வழிமொழிந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த வரைமுறைகூட நடக்கவிடாமல் ரெளடிகளும், கேடிகளும் கூச்சலிட்டு கூட்டத்தையே அவமதித்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தீர்மானங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு வாசிக்கப்பட இருந்தநிலையில் சி.வி.சண்முகம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது வரம்புமீறிய செயல்.
கடந்த 2008 முதல் கட்சியின் பொருளாளராக இருக்கக் கூடிய நான் பொதுக்குழுவில் கணக்கு வழக்குகளை வாசித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பைக்கூட அவர்கள் தரவில்லை. ஜெயலலிதா எனக்கு கொடுத்த பொறுப்புகளை ஒருமுறைகூட திரும்பப் பெற்றது இல்லை. அந்த அளவுக்கு கட்சிக்கும் அவர்களுக்கும் விஸ்வாசமாக இருந்திருக்கிறேன். கடந்த பொதுக்குழுவில் அவமதிப்பு நடத்தப்போதுகூட நான் அமைதியாக வெளியேறிவிடலாம் என வைத்திலிங்கத்திடம் தெரிவித்தேன். ஏனென்றால் அரசியலில் உள்ளவர்கள் சகிப்புதன்மையுடன் இருக்க வேண்டும் என அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவும் முறையாக நடக்கவில்லை. அப்போது அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தரப்பினர் கூத்தடித்த வீடியோவை எல்லோரும் பார்த்தோம். அன்றைய பொதுக்குழு கூடியபோது எடப்பாடி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் 6 பேர் ஏன் தலைமை அலுவலகத்தில் கூடினர். எங்களை அவமதித்தீர்கள் என தானே தலைமை அலுவலகத்துக்கு வந்தோம்.
பிரச்னையை யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம் உள்ளனர். ஒரு தனிக் கூட்டம் கட்சியை கபளீகரம் செய்யப்பார்க்கிறது. அதை தொண்டர்கள் தடுக்க வேண்டும். ஆரம்ப காலத்திலிருந்து கட்சிக்காக உழைத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.