அதிமுக-வில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுக இன்று வீர நடை போட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஓபிஎஸ் அணிக்கு தாவுவதால் ஒரு பின்னடைவும் கிடையாது. பணம் பாதாளம் வரை பாயும். ஓபிஎஸ், சசிகலா, தினகரனிடம் கோடிக்கணக்கான பணம் குவிந்திருக்கிறது. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஆள் பிடிப்பதற்கான வேலையை செய்து வருகிறார்கள்.
நாங்கள் தொண்டர்களை நம்பி இருக்கிறோம். ஆனால் அவர்கள் பணத்தை நம்பி இருக்கிறார்கள். உத்தமரை போல பேசுவதில் ஓபிஎஸ்-ஐ விட சிறந்த நடிகர் இருக்க முடியாது. ஆஸ்கரையே மிஞ்சும் அளவுக்கு பிரபலமான நடிகர் அவர். ஓபிஎஸ்-க்கு சொல் புத்தியும் கிடையாது, சுய புத்தியும் கிடையாது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு காலையில் ஒரு ஸ்டேட்மெண்ட், மாலையில் ஒரு ஸ்டேட்மெண்டை வெளியிட்டு வருகிறார். கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது… அதுபோல அதிமுக-வில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இடம் கிடையாது. நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்திருப்பார் ஓபிஎஸ்’’ என்றார்.