சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானத் தொழிலின் பங்கு தவிர்க்க முடியாதது. அத்துறையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
கட்டுமானத் தொழில் அகாடமி சார்பில் கட்டுமானத் தொழில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
இதில், மதுரை கலைஞர் நூலகத்தை 98 நாட்களில் கட்டி முடித்தது மற்றும் சென்னை ஹுமாயூன் மகாலை மீட்டுருவாக்கம் செய்ததற்காக பொதுப்பணித் துறைக்கு விருது வழங்கப்பட்டது.
இதேபோல, பல்வேறு பிரிவுகளில் தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 36 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விருதுகளை வழங்கினார்.
கட்டுமானம் தொடர்பான 2 புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். பின்னர் ஆளுநர் ரவி பேசியதாவது:
விவசாயத்துக்கு அடுத்ததாக, கட்டுமானமே நாட்டின் மிகப் பெரிய தொழில் என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் இத்தொழிலின் வளர்ச்சி என்பது ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகும். கட்டுமானத் தொழிலின் வரலாறு மூலமாகவே மனித நாகரிகத்தின் வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியும். கரோனாவுக்கு பிறகு இந்ததொழில் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. அதே நேரம், இத்தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
75-வது சுதந்திர தினத்தில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர், ‘‘முன்னோக்கிச் செல்லுங்கள்’’ என்றார். அதன்படி, நமது கட்டுமானத்தின் பெருமையை எடுத்துரைத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இங்கு இருக்கும் வல்லுநர்கள் தங்களது கட்டுமானத் தொழிலின் அனுபவம் குறித்து புத்தகம் எழுதி அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். அது தமிழில் இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையும் மண்டல மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.
ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது, ஆங்கில மொழியின் தாக்கத்துக்கு உள்ளானோம். அதுமுதல், ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளி என்பது போன்ற தோற்றம் உள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆங்கிலத்தின் உதவி இல்லாமலேயே வளர்ச்சிஅடைந்தபோது நம்மால் ஏன் முடியாது.
கட்டுமானத் துறையை பொருத்தவரை நமது வரலாறு மிகப்பெரியது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானத் துறையின் பங்கு தவிர்க்க முடியாதது. அத்துறையில் நாம் முழுவீச்சில் செயல்பட வேண்டும். அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால், சுதந்திர தின நூற்றாண்டான 2047-ல் உலகுக்கு இந்தியா தலைமை ஏற்பது நிச்சயம். இவ்வாறு ஆளுநர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்,பேராசிரியர் ஏ.ஆர்.சாந்தகுமார், கட்டுமானத் தொழில் அகாடமி ஒருங்கிணைப்பாளர் சிந்து பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.