தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது . சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்தும் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக வலுவான அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கான பரிந்துரையை அரசுக்கு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு வழங்கியுள்ளது. தற்போது அதற்கான ஆலோசனைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைச்சரவை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…