டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு, கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஆயூர் மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவிகளில் ஒருவரை ‘மெட்டல் டிடெக்டர்’ கொண்டு சோதனை நடத்தியபோது, அவரது உள்ளாடையில் இருந்த கொக்கியை ‘மெட்டல் டிடெக்டர்’, ‘பீப் ‘ஒலி எழுப்பியது.
இதையடுத்து அந்த மாணவி தேர்வு எழுத வேண்டுமானால், உள்ளாடையை அகற்றியாக வேண்டும் என்று பெண் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர். வேறு வழியின்றி அந்த மாணவி உள்ளாடையை அகற்றிய நிலையில், 3 மணி நேரமும் மிகுந்த மன உளைச்சலுடன் ‘நீட்’ தேர்வை எழுதினார். இதுபற்றிய தகவல்களை அந்த மாணவியின் தந்தை வெளியிட்டார்.
தன் மகளுக்கு மட்டுமின்றி பல மாணவிகளுக்கு இது போன்று நடந்துள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, கேரள மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆர்.பிந்து கடிதம் எழுதினார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை செய்த புகாரின்பேரில் கொட்டாரக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ‘நீட்’ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், தற்போது பாதிப்புக்கு ஆளான மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வு வருகிற 4-ம் தேதி நடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.