நொய்டா: நொய்டாவில் நொடிப்பொழுதில் இரட்டை கட்டடம் வெடிமருந்து மூலம் தகர்க்கப்பட்டது. நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் ’வாட்டர் ஃபால் இம்லோஷன்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தகர்க்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனத்தின் சார்பில் 40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த நீதிமன்ற வழக்குகளுக்கு பின்னர் இந்த கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இந்த இரட்டைக் கோபுர கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதிக மக்கள் தொகையைக் கொண்ட நொய்டா நகரத்தில் 320 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடங்களில் 40 மாடிகள் உள்ளன. ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகளை கொண்டு இந்தக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினர், 20,000 இணைப்புகளின் வழியே 40 மாடிகளிலும் வெடிப்பொருட்களை வைத்தனர். இரண்டு 40 மாடி கட்டடங்களும் வெறும் 9 வினாடிகளில் தரைமட்டமாயின. இந்த இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதால் 30,000 டன் கட்டுமான கழிவுகள் குவிந்ததாகவும் சுமார் 1,200 லாரிகள் மூலம் மூன்று மாதங்கள் இந்த கழிவுகளை அகற்ற வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கட்டிடங்களை சுற்றி உள்ள அனைவரும் மற்றும் அவர்களது வளர்ப்பு உயிரினங்களும் இன்று அதிகாலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட 5,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. வெடிவைத்து தகர்க்கப்பட்ட ஐந்து மணிநேரம் கழித்து தான் மீண்டும் அப்பகுதியினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் சுற்றித் திரியும் உயிரினங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இது, இந்தியாவில் வெடிவைத்து தகர்த்தப்பட்ட மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடமாகும்.