நொய்டா,-நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது; உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
கட்டுமானம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாகவும், புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து இரட்டை கோபுரங்களை இடிக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு, பல காரணங்களால் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, இன்று கட்டாயமாக இரு கோபுரங்களையும் இடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இரட்டை கோபுரத்தை ‘அடிபை இன்ஜினியரிங்’ என்ற நிறுவனத்திடம் இடிப்பு பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த கோபுரங்களை இடிக்க, 3,700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை, ஹரியானா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டன. ‘நீர்வீழ்ச்சி வெடிப்பு’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன. இதன் படி, வெடிமருந்துகள் கட்டடத்தின் உள்பகுதிக்குள் வைக்கப்படும். கட்டடம் இடிந்து விழுந்ததும், உள்புறமாகவே விழும். வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த இடிப்பால், 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடு குப்பை குவியும். இவற்றை அகற்ற, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். தகர்ப்பு பணிகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சரியாக, இன்று பிற்பகல் 2:30க்கு கட்டடம் இடிக்கப்படும்; 9 வினாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்து விடும். ஒட்டுமொத்த இடிப்பு பணிகளுக்கும், 20 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement