தலைநகர் டெல்லி அருகே நொய்டாவில் சூப்பர்டெக் ட்வின் டவர்ஸ் என்ற பெயரில் மிகவும் பிரம்மாண்டமாக இரட்டை மாடி கட்டடம் கட்டப்பட்டது. இதில் Apex என்ற கட்டிடம் 103 மீட்டரும் (32 மாடிகள்), Ceyane என்ற கட்டிடம் 94 மீட்டர் உயரமும் (29 மாடிகள்) கொண்டதாக இருந்தன. இவை விதிகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில் இரட்டை மாடி கட்டடத்தை தகர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் ஓராண்டாக தள்ளி போடப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் (ஆகஸ்ட் 28) பிற்பகல் 2.30 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டது. இதற்கான பணிகள் ‘அடிபை இன்ஜினியரிங்’ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். போக்குவரத்து தடை, மின்சாரம் மற்றும் எரிவாயு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த கட்டிடம் வெடிக்கும் போது சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்வுகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்க ஆம்புலன்ஸ், தயார் நிலையில் மருத்துவமனைகள், முதலுதவி சிகிச்சை குழுவினர் என பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திட்டமிட்டபடி இன்று காலை கவுண்ட்டவுன் தொடங்கியது.
முன்னதாக அனைத்து மாடிகளிலும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. இதற்காக 3,700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உட்புறமாக இடிந்து விழும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். எல்லாம் கச்சிதமாக செய்யப்பட்ட நிலையில், எச்சரிக்கை உணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைசி நிமிடத்தில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. சரியாக 2.30 மணிக்கு வெடிபொருட்கள் வெடித்து அடுத்த 9 வினாடிகளில் ஒட்டுமொத்த கட்டிடமும் சரிந்தது.
இதனை தொலைவில் இருந்து பலரும் வீடியோ எடுத்தும், நேரில் கண்டும் ரசித்தனர். இதையடுத்து கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழத் தொடங்கியது. இரட்டை மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 4 மாடிகள் உயரத்திற்கு இடிபாடுகள் குவிந்தன. இவை சுமார் 80 ஆயிரம் டன்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. புகை முழுவதும் அடங்கி இயல்பு நிலை திரும்பிய பின்னரே அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்த ஒட்டுமொத்த இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது. அருகிலுள்ள கட்டிடங்களில் சேதங்கள் ஏற்பட்டால் அதனை ஈடுசெய்யும் வகையில் 100 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரட்டை மாடி கட்டிடத்தை இடிப்பதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி 21ல் தொடங்கி 187 நாட்கள் நடைபெற்றது. குதுப்மினாரை விட உயர்ந்த கட்டிடம் என்ற பெயர் பெற்ற நொய்டா சூப்பர்டெக் ட்வின் டவர்ஸ் கட்டடம் இடித்து தகர்க்கப்பட்டது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.