மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 1883ம் ஆண்டு பிறந்தவர் விநாயக தாமோதர் சாவர்க்கர். இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்ட வீரர்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து இருந்தாலும், 12 ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டார். இதன் பின்னணியில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என கடந்த பல ஆண்டுகளாகவே தகவல் பரவி வருகிறது.
அப்படி இருக்கையில், சாவர்க்கரை வீர புருஷனாக மாற்றும் முயற்சியை பாஜக கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி, மன்னிப்பு கடிதம் ஒன்றை வைரலாக பரவி விட்டபடி சமூக வலை தளவாசிகள் ஆண்டுக்கணக்கில் வச்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிதாக செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பள்ளி மாணவ மாணவிகளும் இதை படித்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
அதாவது ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் கர்நாடக பாஜ அரசு அமைத்த பாடத்திட்ட குழு, ‘காலத்தை வென்றவர்கள்’ என்கிற பெயரில் புதிதாக இணைத்துள்ள பகுதியில் சாவர்க்கர் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது.
அதில் அந்தமான் சிறையில் ஈ, எறும்புகள் கூட நுழைய துவாரம் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்டு இருந்த சாவர்க்கர் தினந்தோறும் பறவை மீது அமர்ந்து அறையில் இருந்து வெளியேறி இந்திய நிலப்பகுதிக்கு வந்து சென்றார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தகவல் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு கட்டுக்கதையை மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பது? என தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் இந்த தகவல் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் அவர்களும் கதையை படித்துப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளதாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.