பாகிஸ்தானில் தொடரும் மழை: பலி ஆயிரத்தை தாண்டியது| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்து வரும் மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,12,275 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4,98,442 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 1,527 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 71 பேர் காயமடைந்தனர். அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 76 பேர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 31 பேர், கில்ஜித் பல்டிஸ்தானில் 6 பேர், பலோசிஸ்தானில் 4 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் 9,49,858 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளது. அதில், 6,62 446 வீடுகள் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. 287,412 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 7,19,558 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

149 பாலங்கள் முற்றிலும் தகர்ந்தன. இதுவரை 3,452 கி.மீ., சாலை சேதம் அடைந்துஉள்ளது. 170 கடைகள் நொறுங்கியுள்ளன. மழை வெள்ளத்தால் 110 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 72 மாவட்டங்கள் பேரிடர் கால அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் தகவலின்படி கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 134 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் 388.7 மி.மீ., மழை பதிவாகியது. இது 190.07 சதவீதம் அதிகமாகும்.

latest tamil news

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேரழிவு காரணமாக, பாகிஸ்தானில் மழை அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளதாக உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.