பாஜகவுக்கு கட்டமே.. சரி இல்லை; கூடாரத்தை காலி செய்யும் குஷ்பூ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இதனால், அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். குஷ்பு மீது ரசிகர்கள் வைத்திருந்த பாசத்தின் வெளிப்பாடாக திருச்சி அருகே கோயில் கட்டிய சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

குஷ்பூவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் குஷ்பூ இட்லியை உருவாக்கி உரிமையாளர்கள் கல்லா கட்டவும் ஆரம்பித்தனர்.

இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்து கொண்ட குஷ்பூவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதன் பிறகு குஷ்பூவுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டதால் கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் சேர்ந்து பயணிக்க தொடங்கினார்.

திமுகவில் சாதாரண உறுப்பினராக சேர்ந்த குஷ்பூ, நாளடைவில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களையும் தாண்டி, நேரடியாக தலைமையிடம் அதிக நெருக்கம் காட்டினார்.

இதனை முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகளே கண்டித்ததாகவும், இதன் காரணமாக குஷ்பூ அதிருப்தியில் இருந்ததாகவும் அப்போது பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் திமுகவில் இருந்து விலகிய குஷ்பூ திடீரென டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி முன்னிலையில் கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பூவை நியமனம் செய்து அழகு பார்த்தது. இதனை கட்சி தொண்டர்களும் பெரிதும் வரவேற்றனர்.

காங்கிரஸ் கட்சியில் குஷ்பூ செய்தி தொடர்பாளராக இருந்தாலும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களையே எடுத்து வைத்து வந்ததால் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே அடுத்த சில தினங்களில் அதாவது கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பாஜ தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அந்த கட்சியில் குஷ்பூ இணைந்தார்.

அந்தவகையில் குஷ்பூ அரசியலில் கால் வைத்து 12 ஆண்டுகளில் 3 கட்சிகளுக்கு மாறிவிட்டார். திமுக, காங்கிரஸ், பாஜக என எந்த கட்சியில் பயணித்தாலும் தனக்கு மனதில் தோன்றும் கருத்துக்களை ஓபனாக பேசும் துணிச்சல் குஷ்பூவுக்கு உள்ளது.

அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறினாலும் கட்சி வேறுபாடு இன்றி குரல் கொடுக்க கூடியவர் குஷ்பூ. அந்தவகையில் தற்போது பில்கிஸ் பானு விவகாரத்தில் குரல் கொடுத்த ஒரே காரணத்துக்காக சொந்த கட்சியினரே விமர்சிக்கும் சூழல் உருவாகிவிட்டது.

அதாவது குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுவிக்க கூடாது. விடுதலை செய்தால் அது மனித குலத்தையும், பெண்மையையும் அவமானப்படுத்தும் செயல்.

பில்கிஸ் பானுவாக இருந்தாலும் அல்லது வேறு எந்த பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு நியாயம் கிடைத்திட அரசியல் கட்சி மற்றும் சித்தாந்தம் கடந்து, ஆதரவு வழங்க வேண்டியது அவசியம் என பதிவு ஒன்றை போட்டார்.

குஷ்பூவின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருக்கு எதிராக டெல்லி தலைமைக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் பாஜகவில் இருந்து குஷ்பூ விலக போவதாக செய்திகள் ரெக்கை கட்டி பறந்ததால் கட்சி வட்டாரத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில் குஷ்பூ மீண்டும் ஒரு பதிவை டிவிட்டரில் தட்டி விட்டார்.

அதில் ’நான் பாஜகவில் இருந்து விலக போவதாக சொல்கிறார்கள். நான் உண்மையை பேசுவேன். ஏனென்றால். நான் பிரதமர் நரேந்திர மோடிஜியை நம்புகிறேன். உண்மையை பேசுவதற்கும், என் கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவதற்கும் அவர் எனக்கு நம்பிக்கை தருகிறார்’ என்று கூறி, சர்ச்சைக்கு முடிவு கட்டியுள்ளார்.

பிரதமர் மோடியை டேக் செய்து இந்த டிவிட்டர் பதிவை போட்டுள்ளதால் அவசரப்பட்டு எந்த முடிவையும் குஷ்பூ எடுக்க மாட்டார் என்று பாஜக முக்கிய தலைவர்கள் நம்புகின்றனர்.

அதே சமயம், ‘அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் கண்டிப்பதா? மரியாதை இல்லாத இடத்தில் குஷ்பூ ஒருபோதும் இருக்கமாட்டார்’ என அவரை, பற்றி தெரிந்த நபர்கள் ஆரூடம் சொல்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.