பெரியகுளம்: தற்போது தொண்டர்கள் நம்மிடமும், குண்டர்கள் அவர்களிடமும் உள்ளனர் என, ஆதரவு தெரிவிக்க வந்த பழநி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையிலான அதிமுகவினரிடம் ஓபிஎஸ் கூறினார்.தேனி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையில், நிலக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உடன் இருந்தார். அவர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:
எந்த நோக்கத்திற்காக அதிமுக துவக்கப்பட்டதோ அதை எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் நடத்திச்செல்ல வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டச் செயலாளர்கள் இரவு முழுதும் ரவுடிகளை அங்கேயே வைத்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். இதனால் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று மன அமைதிக்காக தலைமைக்கழகம் சென்றபோது எங்களை தாக்கினார்கள்.
இந்த இயக்கத்தில் தற்போது தொண்டர்கள் நம்மிடமும், குண்டர்கள் அவர்களிடமும் உள்ளனர். அதிமுக ஏற்கனவே சேவல், இரட்டை புறா அணிகளாக பிரிந்தபோது தேர்தலில் பலத்த அடி கிடைத்தது. தற்போதும் பிரிந்து செயல்பட்டால் மீண்டும் அதுதான் கிடைக்கும். எனவே நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் பிடிவாதம் கூடாது. நான் முதல்வராக வேண்டும் என்று கூறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்.