துபாய்: கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா – ஜடேஜா மீது மைதானத்திலேயே கோபப்பட்ட நிலையில், இன்று அதே இணை ஒன்றிணைந்து பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தால் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றைதான்.
அதுதான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஆசிய கோப்பை
கடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ரிஜ்வான் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
இந்தியா அசத்தல் பந்துவீச்சு
முஹம்மது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று குறை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினர். குறிப்பாக புவனேஷ்வர் குமாரும் ஹர்திக் பாண்டியாவும். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுக்க, ஹர்திக் பாண்டிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா அதிர்ச்சி தொடக்கம்
பாகிஸ்தான் அணி 147 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய இந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகவிட, கேப்டன் ரோகித் ஷர்மாவும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மட்டும் நிதானமாக ஆடி 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கை நோக்கி நகர்ந்தனர்.
நிரூபித்த பாண்டியா
கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஜடேஜா அவுட்டாக நவாஸ் ஓவரின் 4 வது பந்தில் பவுண்டரில் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியை இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் ஜடேஜா 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்களை குவித்தார். பாண்டியா 17 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 33 ரன்களை சேர்த்தார்.
2017 சாம்பியன்ஸ் டிராபி
இந்த காட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை நினைவுப்படுத்துகிறது. அதிலும் இந்திய அணி ரன் சேசிங்கில் ஈடுபடும்போது மேல் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 76 ரன்களை குவிப்பார்.
கோபப்பட்ட பாண்டியா
அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஜடேஜாவின் தவறான அழைப்பால் ஹர்திக் பாண்டியா ரன் அவுட்டாக மைதானத்திலேயே கோபத்தை காட்டி வெளியேறினார் பாண்டியா. அந்த போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது. ஆனால், இன்றைய போட்டியில் 5 ஆண்டுகால வடுவை தீர்க்கும் வகையில் இருவரும் சிறப்பாக ஜோடி சேர்ந்து இந்திய அணியை வெற்றிபெற செய்துள்ளனர்.