மன்னார்குடியில், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழாவில் 9- நாள் அரங்க நிகழ்ச்சிக்கு சன்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கே.ஆர்.மதிவாணன் வரவேற்புரை. நிகழ்ச்சியில் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
புத்தகங்கள் தான் ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். அது நிறைவான வாழ்க்கை வாழ வழி கோலும். ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள் மற்றும் வீதி தோறும் நூலகங்கள் அமைய வேண்டும். திருக்குறள் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட தன்னுடைய அனைத்து குறள்களையும் மிகவும் மென்மையாக தான் எடுத்துரைத்துள்ளார்.
அவர் எங்குமே கடிந்து சொன்னதில்லை ஆனால், அவரே கூட ஒரு குறளில் மிக கடுமையாக கட்டளையாக வலிமையாக கூறுகிறார். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என கடுமை காட்டி மனிதர்களை நல்வழி படுத்துபவை புத்தகங்களே என்பதால் இக்குறளை இவ்வாறு எழுதியிருக்கிறார்.
நூல்கள் கற்க கற்க அறிவு வளரும் ஞானம் பெருகும். முதன்முதலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடி சுதேசி இயக்க முன்னோடியாக கப்பல் விட்டு போராட்டம் செய்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகம் அளப்பரியதல்லவா அதை நாம் உணர வேண்டும்.
“புத்தகம் வாசிக்க வாசிக்க வாழ்க்கை வசப்படும்”. “தலைகுனிந்து புத்தகம் படித்தால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும்”. “தொட்டுப்பார்த்தால் காகிதம். தொடர்ந்து படித்தால் அதுவே ஆயுதம்” என்கிற வகையில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும். மன்னார்குடி போன்ற ஊர்களில் புத்தக கண்காட்சி நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்று பேசியுள்ளார். இவ்விழாவின் முடிவில் எஸ்.டி.முருகேசன் நன்றி கூறினார்.