மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி தேங்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர்: பலன்தராத ஸ்மார்ட் சிட்டி திட்டம்

மதுரை: மதுரையில் மழை பெய்தாலே மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாதாளசாக்கடையும் பொங்கி மழைநீருடன் கலந்து தூர்நாற்றம் வீசுவதால் கோயிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி எந்த பயனும் இல்லை.

முக்கிய ஆன்மிக தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். உள்ளூர் மக்களும், காலையும், மாலையும் கோயிலில் நடக்கும் பூஜைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

அதனால், காலை, நேரங்களில் கோயில் வீதிகளில் பக்தர்கள் கூட்டம் திருவிழா போல் காணப்படும். அதனால், மீனாட்சியம்மன் கோயில் பகுதியை மேம்படுத்தி சுகாதாரமாக பாதுகாக்க இப்பகுதியை மையமாக கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மூல ஆவணி வீதிகள், மாசி வீதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் ரோடு சாலைகளாக அமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு சாலைகளும் அகலப்படுத்தப்பட்டன.

சித்திரை வீதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக காபுள் ஸ்டோன் (நேச்சுரல் கற்கள்) கொண்டு சாலை அமைக்கப்பட்டது. மூல ஆவணி வீதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. மாசி வீதிகளில் சிமெண்ட் காங்கீரிட் ரோடு போடப்பட்டது. அதனால், கடந்த காலங்களை போல் மழைநீர் தேங்காது, பாதாளசாக்கடை அடைத்து கழிவுநீரும் வெளியே வராது என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டபிறகு தற்போதும் சாதாரண மழைக்கே மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மழைநீர் தெப்பம்போல் தேங்குகிறது. அதோடு, பாதாளசாக்கடை அடைப்பும் ஏற்பட்டு கழிவு நீரும் பொங்கி மழைநீருடன் கலந்து மீனாட்சிம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் தேங்கி நிற்கிறது. தற்போது மதுரையில் மழை தொடர்ச்சியாக பெய்கிறது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தேங்கிய மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து தேங்கி கடும் தூர்நாற்றம் வீசியது. கோயிலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள், குழந்தைகள் இந்த சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் மூக்கைப்பிடித்து சென்றனர். இந்த கழிவு நீரில் மிதித்துவிட்டுதான் பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது.

அதுபோல், சாமிதரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர்களும் இந்த கழிவு நீரில் மிதித்து விட்டுதான் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. கோயிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி எந்தப் பயனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இதுபோல் பாதாள சாக்கடை பொங்கும் இடங்களையும், மழைநீர் தேங்கும் பகுதிகளை சீரமைத்து பக்தர்கள், சுறு்றுலாப் பயணிகள் மழைக்காலத்தில் கோயிலுக்கு சிரமம் இல்லாமல் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.