மன்னார்: மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான கடற்பரப்பில் இந்தியாவின் அதானி குழுமம் மிக பிரம்மாண்டமான காற்றாலை மின் திட்டத்தை இலங்கை அனுமதியுடன் அமைப்பதற்கு எதிராக ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான இந்தப் போராட்டங்களை சீனா தூண்டிவிடுவதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இலங்கையின் தென்பகுதியான சிங்களர் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது. இலங்கைக்கு குறுகிய கால கடன் வழங்கி அதனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இலங்கையின் பகுதிகளை நீண்டகால குத்தகைக்குப் பெற்று வருகிறது சீனா.
இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வட இலங்கையிலும் சீனா கால் பதிக்க முயன்றது. இதற்கு இலங்கை அரசும் ஒத்துழைப்பு வழங்கியது. தமிழ்நாட்டை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் சீனா, பிரம்மாண்ட காற்றாலை திட்டங்களை அமைக்க முதலில் ஒப்புதல் கொடுத்தது இலங்கை. ஆனால் இந்திய அரசு இதனை மிக கடுமையாக எதிர்த்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் சீனாவுக்கான அனுமதியை இலங்கை திரும்பப் பெற்றது.
இதில் கடுப்பாகிப் போன சீனா, தமிழக மீனவர்கள்- ஈழத் தமிழ் மீனவர்கள் இடையேயான பிரச்சனையில் தலையிட்டது. ஈழத் தமிழ் மீனவர்களை தங்களது பக்கம் திருப்ப பகீர பிரயத்தனம் செய்து வருகிறது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூண்டுதல்தான் இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு மன்னார் வளைகுடா காற்றாலை திட்டத்தை இலங்கை அரசு வழங்கிவிட்டது. ஆனால் இத்திட்டத்துக்கு எதிராக தற்போது ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கூறியதாவது:
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்களாலும் அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெறும் கனிய வள மணல் அகழ்வு ஆய்வுக்காக இடம் பெறுவதாக சொல்லப்பட்டாலும் இன்று வரை 4000 துளைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது. எனவே இவ் இரண்டு செயற்திட்டங்கள் தொடர்பாக கடற்றொழிலாளர் சமூகம் சார்ந்து தொடர்ச்சியாக போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிக்காட்டிய போதும் இந்த செயற்பாட்டை எங்களால் தடுத்து நிறுத்த முடியாத நிலையே இதுவரை காணப்படுகின்றது.
அதன் அடிப்படையில் கடந்த வாரம் பிரஜைகள் குழுவினால் காற்றாலைக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தை முழுமைக்கும் விதமாக காற்றாலை மின் செயற்திட்டத்தை நிறுத்தி செயற்திட்டத்தை தீவுக்கு அப்பால் கொண்டு செல்லும் படி வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை மாபெரும் கண்டன பேரணி ஒன்றை நடத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவில் அமைப்புகளும் ஒன்றுகூடி தீர்மானித்துள்ளோம்.
இந்த அடிப்படையில் கடற்றொழிலாளர் சமூகம் அன்றைய நாள் தங்கள் தொழில்களை நிறுத்தி இந்த பேரணிக்கு ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களையும் அழைத்து கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கமைய அனைத்து சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் வருகின்ற 29 திகதி முழுமையாக கடற்றொழில் நிறுத்தப்பட்டு அனைத்து கடற்றொழிலாளர்களின் பங்களிப்போடு இந்த அமைதியான கண்டன பேரணி மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெறும். இந்த போராட்டத்திற்கு கடல் சார்ந்த சமூகமும் ஏனைய பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் செலுத்தி இந்த காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு செயற்திட்டம் ஆகிய இரண்டையும் மன்னார் தீவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்து இன மக்களும் வழு சேர்க்க வேண்டும். இவ்வாறு ஆலம் தெரிவித்தார்.