காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து படிப்பதற்காக வெளிநாடு செல்ல பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்தது. தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு செப்டம்பர் மாதம் பதவியேற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொறுப்பேற்ற தலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்தது.
வீட்டை விட்டு வெளியில் செல்லும் அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பூங்காக்களில் ஆண்கள் இருக்கும் போது பெண்களை அனுமதிக்கக் கூடாது. திரைப்படம், கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பாக புகார் செய்வதற்காக இருந்த நடைமுறைகளை தலிபான்கள் ரத்து செய்தனர். இதனால் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட முடியாமல் போய்விட்டது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், படிப்புக்காக கஜகஸ்தான், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல மாணவர்கள், மாணவிகள் பலர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், மாணவர்களுக்கு மட்டுமே இதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் மாணவிகள் படிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.