ராஞ்சி: முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கப் பிரச்சினையால் ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.
2021 மே மாதம் ராஞ்சியின் அன்காரா வட்டத்தில் 0.88 ஏக்கர் பரப்பிலான குவாரி, முதல்வருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பத வியை தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக கல்குவாரி உரிமத்தை அவர் பெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது.
மேலும், முதல்வரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மாநில ஆளுநர் ரமேஷ் பெய்ஸிடம் பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் மனு அளித்தார். இந்த மனுவை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
கடந்த 6 மாதங்களாக முதல்வர் ஹேமந்த் சோரன் மற்று் பாஜக தரப்பு வாதங்கள் தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை, சீலிட்ட உறையில் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு கடந்த 25-ம் தேதி அனுப்பிவைத்தது.
தேர்தல் ஆணைய அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வில்லை. எனினும், முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியைப் பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், கடந்த சில நாட்களாக ஜார்க்கண்ட் அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிலிருந்து 3 சொகுசுப் பேருந்துகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று அழைத்துச் செல்லப்பட்ட னர். ஜார்க்கண்டின் கண்டி மாவட்டம், லத்ராத்து அணைப் பகுதியில் உள்ள துமார்கர் சொகுசு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் முதல்வர் ஹேமந்த் சோரனும் சென்றுள்ளார்.
இந்நிலையில், சொகுசு விடுதியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று மாலை மீண்டும் தலைநகர் ராஞ்சி திரும்பினர்.
அங்கிருந்து மேற்குவங்கம் அல்லது சத்தீஸ்கருக்கு எம்எல்ஏக் கள் அழைத்துச் செல்லப்படு வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தரப்பில் கூறும்போது, “முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒதுக்கப்பட்ட குவாரி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனினும், கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமாக சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளது. எங்கள் கூட்டணி எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றனர்.
11 எம்எல்ஏ-க்கள் மாயம்?
காங்கிரஸை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் அண்மையில் மேற்குவங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் ரூ.48 லட்சம் பணத்துடன் கைது செய்யப்பட்டனர். கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக பணம் கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
தற்போதைய சூழலில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏ-க்கள் மாயமாகி இருப்பதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 82 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். ஆட்சியமைக்க 42 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணிக்கு 49 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ள நிலையில், 11 எம்எல்ஏ-க்கள் அணி மாறினால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.