கீவ்: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவு எடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ள ஜபோரிஷ்ஜியாவில் உள்ளது. இதன் அருகே உக்ரைனின் ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜபோரிஷ்ஜியா பகுதி தற்போது ரஷ்ய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணு மின் நிலையம் அருகே தாக்குதல் நடத்துவது, கடந்த 1986-ல் நடைபெற்ற செர்னோபில் அணு உலை வெடிப்பால் ஏற்பட்டது போல் பேரழிவு ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன.
இதனால் ஜபோரிஷ்ஜியா அணுமின் நிலையத்தின் நிலவரத்தை அறிய ஐ.நா சர்வதேச அணு சக்தி முகமை விரும்புகிறது. இந்த அணுமின் நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப அணுசக்தி முகமை தலைவர் ரபேல் மரியானோ கிராஸி முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஆனால் இப்பகுதியில் ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்வதால், இந்த குழுவினர் ஜபோரிஷ்ஜியா அணுமின் நிலைய பகுதிக்கு செல்வது சிக்கலாக உள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் கூறுகையில், ‘‘உக்ரைனில் உள்ள அணு உலைகளை பாதுகாக்க அணுசக்தி முகமை இயக்குனரிடம் பேசி வருகிறேன். மக்கள் பயன்பாட்டுக்கான அணு மின் நிலையங்கள் முழுவதுமாக பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.