போபால்: வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதன் காரணமாக கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய கட்டத்தை தாண்டி நீர் ஓடும் நிலையில், கரையோரத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால், கங்கை நதியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அபாய கட்டத்தை தாண்டி நீர் ஓடுகிறது.
கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு
கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாரணாசியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. வாரணாசியில் உள்ள பிரபலமான படித்துறைகளும் நீரில் மூழ்கின. அஸ்சி படித்துறையில் இருந்து நமோ படித்துறை வரை உள்ள பகுதிகள் நீரில் மூழ்கி விட்டன. வாரனாசி, காசியாபூர், மிர்சாபூர் மற்றும் பலியா ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புகள்
இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சில குடியிருப்பு பகுதிகளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சில இடங்களில் மக்கள் படகுகளை பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அருகில் உள்ள பள்ளி கட்டிடங்கள் உள்பட சமூக நலக்கூடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
80 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கின
இது தொடர்பாக வாரணாசி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ”18 நகராட்சி வார்டுகள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கங்கை மற்றும் அதன் துணை நதியான வருணாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 228.69 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அதில் விளைக்கப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரக்யாராஜ் மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
மீட்பு குழுவினர் உஷார்
மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வரும் நாட்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்காளத்தில் இமய மலையை ஒட்டியுள்ள இடங்கள் மற்றும் சிக்கிம் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரகாண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலும் வரும் 30 ஆம் தேதிவரை கனமழை பெய்யலாம் என்றும் உத்தரபிரதேசம் மற்றும் இமாசல பிரதேசத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்புக்குழுவினரும் சில பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.