புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
2021 ஏப்ரல் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப் பேற்றார். அவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரையின்பேரில், யு.யு.லலித்தை, உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தரவிட்டார்.
வழக்கறிஞராக இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்ட ஒருவர், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற 2-வது நபர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன், இதுபோன்ற பெருமையை முதல்முறையாகப் பெற்றவர் நீதிபதி எஸ்.எம்.சிக்ரி. இவர், 1971-ல் உச்ச நீதிமன்றத்தின் 13-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.
தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறும்போது, “வழக்குகள் பட்டிய லிடப்படும் விவகாரத்தில், எளிமை, தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய 3 முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் ஓர் அரசியல் சாசன அமர்வு ஆண்டு முழுவதும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அவசர வழக்குகளைப் பட்டியலிடுவதில், வழக்கறிஞர்களுக்கும், பதிவு அலுவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இதற்கென தனி அமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
யு.யு.லலித்தின் பின்னணி
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் 1957-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி யு.யு.லலித் பிறந்தார். மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாகப் பதவி வகித்த யு.ஆர்.லலித்தின் மகனான யு.யு.லலித், 1983-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் 1983 முதல் 1985 வரை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் டெல்லிக்குச் சென்ற அவர், 2004-ல் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறி ஞரானார்.
2ஜி ஊழல் வழக்கில்…
இவர், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பு சிறப்பு வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். 2014 ஆகஸ்ட் 13-ம் தேதி யு.யு.லலித் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதன்மூலம் வழக்கறிஞராக இருந்த ஒருவர் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
தலைமை நீதிபதியாக நேற்று பொறுப்பேற்ற யு.யு.லலித், அடுத்த 74 நாட்களுக்கு மட்டுமே இந்தப் பதவியில் இருப்பார். வரும் நவம்பர் 8-ம் தேதி இவர் ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.