விதிமீறி கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுரம் வெடிவைத்து தகர்ப்பு; 9 வினாடிகளில் நொறுங்கியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நொய்டா: நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதனால், அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது; உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கட்டுமானம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாகவும், புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.

latest tamil news

இதையடுத்து இரட்டை கோபுரங்களை இடிக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு, பல காரணங்களால் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, இன்று கட்டாயமாக இரு கோபுரங்களையும் இடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இரட்டை கோபுரத்தை ‘அடிபை இன்ஜினியரிங்’ என்ற நிறுவனத்திடம் இடிப்பு பணி ஒப்படைக்கப்பட்டது. சரியாக, இன்று பிற்பகல் 2:30க்கு கட்டடம் இடிக்கப்பட்டன. 9 வினாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, இந்த கோபுரங்களை இடிக்க, 3,700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இவை, ஹரியானா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டன. ‘நீர்வீழ்ச்சி வெடிப்பு’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதன் படி, வெடிமருந்துகள் கட்டடத்தின் உள்பகுதிக்குள் வைக்கப்பட்டன. கட்டடம் இடிந்து விழுந்ததும், உள்புறமாகவே விழும் வகையிலும், வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த இடிப்பால், 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடு குப்பை குவியும். இவற்றை அகற்ற, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். தகர்ப்பு பணிகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கட்டடங்கள் இடிக்கப்பட்டதால், அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

latest tamil news

தெருநாய்கள் மீட்பு

இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தை சுற்றி திரியும் நாய்களை மீட்கும் முயற்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன. எந்த விலங்கும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 50 தெருநாய்களை மீட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.