விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் இன்று தகர்ப்பு

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தகர்க்கப்படுகிறது.

நொய்டாவில் ஏடிஎஸ் என்ற கிராமத்தில் எமரால்டு கோர்ட் என்ற குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்ற பெயரில் 32 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. அதன் அருகே சேயன் என்ற பெயரில் 29 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரட்டை கோபுரங்கள் போல் காட்சியளிக்கும். 100 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கட்டிடம், குதுப்மினாரைவிட உயரமானது.

இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானதால், இந்த கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த நொய்டா இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான பணி எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 3,700 கிலோ வெடிபொருட்களை கட்டிடத்தின் தூண்களில் நிரப்பும் பணிகள் முடிவடைந்து விட்டன. இன்று இந்த கட்டிடம் ‘வாட்டர் ஃபால் இம்லோஷன்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தகர்க்கப்படுகிறது. வெடிபொருட்கள் வெடித்ததும், அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, நீழ்வீழ்ச்சி கீழே விழுவதுபோல், சில நிமிடங்களில் இந்த இரட்டை கோபுரம் சரிந்து தரைமட்டமாகும்.

இதுகுறித்து எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் உத்கர்ஷ் மேத்தா கூறியதாவது:

வெடிபொருள் வெடிக்க வைத்ததும், 15 நொடிகளுக்குள் கட்டிடம் தரைமட்டமாகும். இதனால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இதன் அருகே 9 மீட்டர் தூரத்தில் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. இந்த இரட்டை கோபுரம் 150 சதவீதம் பாதுகாப்பாக தகர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அருகில் உள்ள கட்டிடங்களின் வண்ண பூச்சுகளில் வேண்டுமானால், மிக நுண்ணிய அளவில் வெடிப்புகள் ஏற்படலாம்.

5,000 பேர் வெளியேற்றம்

நொய்டா இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படுவதால், எமரால்ட் கோர்ட் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர், அவர்களின் செல்ல பிராணிகளுடன் நேற்று காலை 7 மணிக்குள் வெளியேற்றப்பட்டனர். இங்கிருந்து 2,700 வாகனங்களும் அப்பபுறப்படுத்தப்பட்டன. இரட்டை கோபுர கட்டிடத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு, வெடிகுண்டு நிபுணர்களை தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. நொய்டா இரட்டை கோபுரம் தரைமட்டமானவுடன் 55,000 டன்கள் முதல் 88,000 டன்கள் வரை இடிபாடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்த குறைந்தது 3 மாதங்கள் ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.