திருச்சி: விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று காலை கொடி அணிவகுப்பு நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த கொடி அணிவகுப்பு பாலக்கரை ரவுண்டானாவிலிருந்து துவங்கி சிந்தாமணி அண்ணா சிலை வரை சென்றது. இந்த கொடி அணிவகுப்பில் திருச்சி துணை கமிஷனர்கள் அன்பு, சுரேஷ்குமார் மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், அதிரடிப்படை, ஊர்காவல் படையினர் மற்றும் கூட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்கள் பங்கேற்றது.
பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில்,‘‘ திருச்சியில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில், பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று( நேற்று) கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதைப்போல், திருச்சியில் பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்,’’ என்றார்.