9 ஆண்டுகள் நீடித்த வழக்கு : நொய்டா இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னணி

நொய்டாவில் செக்டார் 93A 2 பகுதியில் சூப்பர்டெக் நிறுவனத்தால் அபெக்ஸ் மற்றும் செயேன் என்ற இரட்டை அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில், அபெக்ஸ்-சில் 32 மாடிகளும்,  செயேனில் 29 மாடிகளும் உள்ளன. இந்த இரு கட்டடங்களும் சுமார் 100 மீட்டர் உயரம் கொண்டவை. இவை குதுப்மினாரை விட அதிக உயரமானவை. 

பிரம்மாண்டமான இந்தக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டதால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு 9 ஆண்டுகள் நடைபெற்றது. இவ்வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம். 

கடந்த 2004-ம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 93A பகுதியில் ‘சூப்பர்டெக் எமரால்டு கோர்ட்’ ஹவுசிங் சொசைட்டி  என்ற பெயரில் பிரம்மாண்ட கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2005-ம் ஆண்டு இக்கட்டடத்திற்கு நொய்டா நிர்வாகம் அனுமதி அளித்தது. தொடக்கத்தில், வணிக வளாகம் மற்றும் தோட்டத்துடன் ஒன்பது மாடிகள் கட்ட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

பின்னர் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம், சூப்பர் டெக் நிறுவனத்திற்கு கூடுதலாக 6 ஆயிரத்து 556 சதுர கிலோ மீட்டர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பர் மாதம், கட்டடங்களின் திட்டம் 11 மாடிகளுடன் 689 குடியிருப்புகளைக் கொண்டதாக மாற்றப்பட்டது. 

2009-ம் ஆண்டு, 24 மாடிகளைக் கொண்ட கட்டங்களாக திட்டம் மீண்டும் மாற்றப்பட்டது. 2012-ம் ஆண்டு மீண்டும் இத்திட்டம் திருத்தப்பட்டு 40 மாடிகளைக் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டதை உறுதி செய்ததோடு, அதனை இடிக்க உத்தரவிட்டதும். மேலும், அங்கு வீடு வாங்கியோருக்கு 14 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பித் தர உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நொய்டா நிர்வாகமும், சூப்பர் டெக் நிறுவனமும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. கட்டடத்தை இடிக்கும் பணி பல முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்,  ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் கட்டடத்தை இடிக்க வேண்டுமென காலக்கெடு விதிக்கப்பட்டது.

ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கட்டடங்களை இடிப்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன. குடியிருப்பில் இருந்த சுமார் 7 ஆயிரம் பேரும்  முன்னரே வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். அருகிலிருந்த குடியிருப்புகளில் காலையிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டடத்தை இடிக்க 3,700 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 20 ஆயிரம் இடங்களில் துளையிடப்பட்டு வெடி பொருட்கள் நிரப்பட்டன. மேலும், கட்டடம் இடியும்போது, சிதறும் கான்கிரீட் துகள்கள் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக 225 டன்கள் கம்பி வலையும், 110 கிலோ மீட்டர் நீளத் துணியும் பல அடுக்குகளாக சுற்றப்பட்டுள்ளன. 

 மொத்தக் கட்டடமும் ஒன்பதே விநாடிகளில் இடிந்தாலும், அதனால் எழுந்த  புகை மூட்டம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   2 நாட்களுக்கும் மேல் இந்த பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள இந்த கட்டடங்களை இடிக்க ரூ.20 கோடி வரை செலவாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.