டெல்லி அருகில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா இடையே நெடுஞ்சாலையில் எம்ரால்டு கோர்ட் என்ற பெயரில் குடியிருப்பு வளாகம் ஒன்றை சூப்பர்டெக் லிமிடெட் நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டு கட்ட ஆரம்பித்தது. 3 முதல் 5 படுக்கையறை வசதியுடன் ஒவ்வொரு வீடும் ரூபாய் ஒரு கோடியிலிருந்து 3 கோடி மதிப்பில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு முதன்முறையாக கட்டுமான திட்டத்தில் சூப்பர்டெக் நிறுவனம் மாற்றம் செய்தது. இதன்படி டவர் ஒன்றுக்கு எதிரில் கார்டன் இருக்கும் என்று பிளானில் காட்டப்பட்டது. ஆரம்பத்தில் 9 மாடிகள் கொண்ட 14 கட்டடங்கள் கட்ட சூப்பர்டெக் நிறுவனம் முடிவுசெய்து, அதற்கு ஒப்புதல் வாங்கியது. ஆனால் 2009-ம் ஆண்டு மீண்டும் கட்டுமான திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி 24 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் புதிதாகக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் முன்பு கார்டனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த இரண்டு கட்டடங்களும் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு மீண்டும் கட்டுமானத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி 11 மாடிகள் கொண்ட 15 டவர்கள் கட்டப்படும் என்றும், 24 மாடிகள் என்று நிர்ணயிக்கப்பட்ட செயேன், அபெக்ஸ் என்ற அந்தக் கட்டிடங்கள் 40 மாடிகளாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏற்கெனவே எமரால்டு கோர்ட் குடியிருப்பு கட்டடங்களில் வசிப்பவர்கள் 40 மாடிக் கட்டடங்கள் சட்டவிரோதமாக கட்டப்படுவதாகக் கூறி அதற்கான ஒப்புதலை ரத்து செய்யவேண்டும் என்று கோரி நொய்டா ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதோடு 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியிருப்புவாசிகள் இரண்டு கட்டடங்களையும் இடிக்க உத்தரவிடவேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு கட்டடங்களையும் இடிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சூப்பர்டெக் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சூப்பர்டெக் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு கட்டடம் கட்டப்படுவதாகவும், அதனைத் தடுக்க குடியிருப்புவாசிகளுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்றும் வாதிட்டார். குடியிருப்புவாசிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமான நிறுவனம் உரிய அனுமதி இல்லாமல் கட்டுமான திட்டத்தில் எந்த வித மாற்றமும் செய்யமுடியாது என்று வாதிட்டனர்.
இதனை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஏற்கெனவே இருக்கும் குடியிருப்புக் கட்டடங்களுக்கு மிகவும் அருகில் இரண்டு கட்டடங்களும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினர். அதோடு இரண்டு கட்டடங்களுக்கு ஒப்புதல் பெறுவதிலும் விதிமுறை மீறல்கள் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி, இரண்டு கட்டடங்களும் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதால் அவற்றை மூன்று மாதங்களில் இடிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி உத்தரவிட்டனர். மேலும் கட்டடங்களை இடிப்பதற்கான கட்டணம், நிபுணர் குழுவை அமைப்பதற்கான கட்டணம் ஆகியவற்றையும் சூப்பர்டெக் நிறுவனமே கொடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல இரண்டு கட்டடங்களிலும் வீடு வாங்கியவர்களுக்கு முழு பணத்தையும் வட்டியுடன் திரும்ப கொடுக்கவேண்டும் என்றும், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூபாய் 2 கோடி கொடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில்தான், தற்போது நொய்டாவின் `ட்வின் டவர்ஸ்’ என அழைக்கப்படும் இந்த இரண்டு கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.