புதுடெல்லி: அடுத்தாண்டு ஜனவரியுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிகாலம் முடிவதால், புதிய தலைவர் ேதர்வு செய்யப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது. 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கு முன் நடக்கும் 11 மாநில பேரவை தேர்தலால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய போது அக்கட்சியின் தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் இருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றதால், அமித் ஷா தேசிய தலைவரானார். தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்ததால் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இதனால் பாஜகவின் புதிய தேசிய தலைவரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. புதிய தலைவரை தேர்வு செய்யும்வரை ஜே.பி.நட்டா செயல் தலைவராக இருந்தார். அதன்பின், அவர் 2019 ஜனவரியில் அதிகாரபூர்வ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவி காலம் அடுத்தாண்டு (2023) ஜனவரியுடன் முடிகிறது. கடந்த 2012ம் ஆண்டு பாஜகவின் அமைப்பில் திருத்தம் செய்யப்பட்ட விதிகளின்படி, பாஜகவில் உள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும் தொடர்ந்து இரண்டு முறை (தலா 2 ஆண்டு) தலைவர் பதவியை வகிக்க முடியும். ஆனால் கடந்த காலங்களில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்படுபவர், ஒரு முறைதான் அந்தப் பதவியில் வகிக்க முடியும். தற்போதைய சூழலில் ஜே.பி.நட்டா ஒரு சுற்று தேசிய தலைவராக பணியாற்றி முடித்த நிலையில், இரண்டாவது சுற்றாக மீண்டும் தேசிய தலைவராக பணியாற்றி வருகிறார். வரும் ஜனவரியோடு அவரது பதவிக்காலம் முடிவதால் பாஜக புதிய தேசிய தலைவர் குறித்த விவாதங்கள் தேசிய அரசியலில் தொடங்கியுள்ளன.
காரணம் வரும் 2024ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாக 11 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல்களை எதிர்கொள்ளுதல் போன்ற சவால்கள் அடுத்தடுத்து உள்ளன. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘தேசிய தலைவர் ேஜ.பி.நட்டாவின் தற்போதைய பதவிகாலம் அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிகிறது. அவரின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்படலாம். புதிய தலைவரை தேர்வு செய்யப்படும்பட்சத்தில், அந்த பட்டியலில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் நாடாளுமன்ற குழு சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டதால், ஏற்கனவே அந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இருந்தும் 2024 லோக்சபா தேர்தல் வரை ஜே.பி.நட்டா தலைமையை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரும்புகின்றனர்’ என்று கூறினர்.