தஞ்சாவூர்: அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதால் அக்கட்சியில் சேர அவசியமில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து விலகிய மற்றும் விலக்கப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தினகரன், ஓ.பன்னீர்செல்வம் யாரையும் கட்சியில் இணைய வேண்டும் என்று அழைக்கவில்லை.
இணக்கமாக செயல்பட வேண்டும் என்று மட்டும் கூறியதாக குறிப்பிட்டார். அவரவர் அவரவர்களுக்காகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என பன்னீர்செல்வம் நினைப்பதால் அதிமுகவில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று தினகரன் கூறினார். புதுக்கோட்டை பேராவூரணி பகுதிகளில் காலங்காலமாக நடைபெற்று வரும் மொய் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார். வட்டியில்லா கடன் கொடுத்து ஒருவரை கை தூக்கிவிடும் ஒரு நல்லெண்ண நிகழ்வு பற்றி கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்றும் தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.