பெங்களூரு: கர்நாடக மாநிலம் 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் பற்றி ஒரு கருத்து இடம்பெற்றுள்ளது. அந்தக் கருத்தால் புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
அந்தப் பாடப் புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது சிறைக்கு வந்த பறவையின் மீதேறி தன் தாய்நாட்டை தரிசிக்க செல்வார் என்று குறிப்பிடப்பட்டிக்கிறது.
குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் இடம்பெற்றிருந்த தகவல்:
“சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால் அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்வதுண்டு. சாவர்க்கர் அந்த புல்புல் பறவையில் இறகுகளில் ஏறி ஒவ்வொருநாளும் தன் தாய்நாட்டை தரிசித்து வருவார்”
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து உண்மைக்குப் புறம்பானதை மாணவர்களுக்குக் கூறி வரலாற்றைத் திரிப்பதா என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின் பங்கு என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
அண்மையில் சுதந்திர தின விழாவை ஒட்டி பாஜக சார்பில் வைத்திருந்த பேனரில் சாவர்க்கரின் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இன்னமும் அங்கு சாவர்க்கரை வைத்து பாஜக, காங்கிரஸ் இடையே அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், 8ஆம் வகுப்பு படப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி இடம் பெற்றுள்ள கருத்தால் இன்னும் சர்ச்சை அதிகமாகியுள்ளது.
சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதே காங்கிரஸார் வைக்கும் வாதம். ஒரு முறை ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ” என்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி” என்று பேசி இருந்தார். அடிக்கடி சாவர்க்கரை மன்னிப்புக் கடிதத்துடன் தொடர்புபடுத்தி ராகுல் காந்தியும் காங்கிரஸும் இன்னும் பிற எதிர்க்கட்சிகளும் பேசுவதுண்டு.
சாவர்க்கர் மன்னிப்புக் கடித சர்ச்சை ஓயாத நிலையில், நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து மத்திய அரசு கூறுகையில், சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்தார் என்பதை நிரூபிக்க எந்தவொரு வரலாற்று ஆவணமும் இல்லை என்று குறிப்பிட்டது.