அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் வழக்கு; தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ெதாடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020ம் ஆண்டு இந்துசமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் வழக்ககுகள் தொடரப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில் ெதாடர்ந்த வழக்கில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட விதிகள் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளை ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்தும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க முடியாது. இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க  முடியாது’ எனக்கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க  நோட்டீஸ் பிறப்பித்தனர். அப்போது குறுக்கிட்ட சுப்பிரமணியன், ‘வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை புதியதாக அர்ச்சகர்களை நியமனம் செய்யக் கூடாது. ஏற்கனவே அர்ச்சகராக பணியாற்றுவோரை நீக்கவும் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.