வாஷிங்டன்: அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இன்று காலை நகரின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் உட்பட மூன்று பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துப்பாக்கிச் சூடு எந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்டது என்று தெரியவில்லை.
துப்பாக்கிச் சுட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 40,000 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டினால் நிகழ்கின்றன. அமெரிக்காவில் கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்த துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் வன்முறை: அமெரிக்காவில் 2022 தொடங்கியதிலிருந்து இதுவரை 309 மாஸ் சூட்டிங் சம்பவங்கள் நடந்துள்ளன. ”துப்பாக்கி வன்முறை நாட்டில் ஒரு தொற்றுநோய் போல் பரவுகிறது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயமாக துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்று கூறிய அமெரிக்க அதிபர் பைடன் அண்மையில் துப்பாக்கி பாதுகாப்பு மத்திய சட்டத்தில் கையெழுத்திட்டார்.
ஆனால் தற்காப்புக்காக கை துப்பாக்கி வைத்திருப்பதை அமெரிக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதனால் துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்ந்து இழுபறியாகிக் கொண்டு வருகிறது.