ஆர்ட்டெமிஸ் என்ற நாசாவின் ராக்கெட் நிலவுக்கு புறப்பட ஆயத்தமாக உள்ளது. பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 13.33 மணிக்கு இந்த ராக்கெட் ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருக்கிறது. ஆனால், உத்தேசிக்கப்பட்ட நேரத்தை விட தற்போது இந்த ராக்கெட் ஏவும் நேரம் சில நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணம்?
ராக்கெட்டின் உள்டாங்கியில் திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் டாங்கிகள் இணைப்பில் ஏற்பட்ட விரிசலை சீர்படுத்தும் பணியில் பொறியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
நாசாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆக அறியப்படும் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்), ஆளில்லா ஓரியன் விண்கலனை சந்திரனை சுற்றி அனுப்ப உள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், 2025ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தமது லட்சியக் கனவை 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா சாத்தியமாக்கவுள்ளது.
அதுவும் சந்திரனில் முதல் வீராங்கனையை தரையிறக்க முடியும் என்று நாசா உறுதியாக நம்புகிறது. இந்த விண்வெளி நிகழ்வை தமது இணையதளத்திலும் சமூக ஊடக பக்கங்களிலும் காண நாசா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விண்வெளி பயணத்தில் மனிதரல்லாத ஷான் ஆடு மற்றும் ஸ்னூப்பி பொம்மைகளை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
- புதிய சகாப்தம்: சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் இன்று சோதனை
- ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு முதல் பயணம் செல்ல தயாராகும் நாசாவின் ராட்சத ராக்கெட்
ஆர்ட்டெமிஸ் பயணம் எவ்வாறு இருக்கும்?
ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்படும் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டாக விளங்கும். காரணம், இது புறப்படும்போது ஏற்படக்கூடிய ஒலி மற்றும் அழுத்தம், ஏறக்குறைய 60 கான்கார்ட் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்களுக்கு சமமான உந்துதலை உருவாக்கும்.இந்த ராக்கெட் பூமியை விட்டு வெளியேறுவது ஒரு ஆரம்பம்தான்.8 நிமிடங்கள் மற்றும் 20 விநாடிகள் பறந்த பிறகு, இதன் பக்கவாட்டுப் பூஸ்டர்கள் மற்றும் முக்கிய கட்டத்தில் உள்ள ஓரியான் விண்கலனை அது உயரே உள்ள நீள்வட்ட பாதைக்கு அனுப்பும். பிறகு இயல்பாகவே அது மீண்டும் பூமியில் வந்து விழும்.
எனவே, சந்திரனின் திசையில் கலனை உயர்த்துவதற்கு முன், மேல் பகுதி அல்லது முக்கிய கட்ட பகுதி, சுற்றுப்பாதையை வட்டமிட வேண்டும்.
ஏவப்பட்ட இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஓரியன் விண்கலன் மற்றும் அதன் பின்புற சேவை தொகுதி, மேல்-நிலையில் இருந்து பிரிக்கப்படும். பின்னர் அவை பாதையில் வட்டப்பாதையில் நிலையாக வேண்டும். அப்போது மணிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் (19,000 மைல்) வேகத்தில் அது விண்வெளியில் செல்ல வேண்டும்.
- விண்வெளியில் ‘உயிர்’ இருக்கிறதா? கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
- உடலும் நலனும்: தூக்கத்துக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்?
திட்டம் சாத்தியமாகாவிட்டால் என்ன ஆகும்?
ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டெமிஸ் I முதலில் உள்ளூர் நேரப்படி 08:33 மணிக்கு (13:33 BST) ஏவ திட்டமிடப்பட்டிருந்தாலும், தேவைப்பட்டால் உள்ளூர் நேரப்படி 10:33 (15:33 BST) வரை பின்னுக்குத் தள்ளப்படலாம். வானிலை அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்.
இந்த நேரத்துக்குள் டேக்-ஆஃப் சாத்தியமில்லை என்றால், வேறு இரண்டு பின் தேதிகளில் ராக்கெட்டை ஏவும் திட்டத்தை செப்டம்பர் 2 அல்லது செப்டம்பர் 5இல் நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பெரும்பகுதி நாசாவின் ஃப்ளைட் டெர்மினேஷன் சிஸ்டம் (எஃப்டிஎஸ்) மூலம் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 18ஆம் தேதி எஸ்எல்எஸ்-இல் விண்கலன் நிறுவப்பட்ட நாளில் இருந்து இதில் உள்ள பேட்டரி 20 நாட்களுக்கு இயங்க சான்றளிக்கப்பட்டிருக்கிறது.
அதற்குள் டேக்-ஆஃப் சாத்தியமாகாவிட்டால், எஃப்டிஎஸ் முறை அகற்றப்பட்டு மாற்றப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட மூன்று தேதிகளில் ஏதேனும் ஒன்றில் டேக்-ஆஃப் நிச்சயமாக நடைபெறும் என்று நாசா அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்