கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தொடுபுழா அருகே அமைந்துள்ளது குடையாத்தூர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சோமன் என்பவரது குடும்பம் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
கூலி தொழிலாளியான சோமன், தனது தாயார் தங்கம்மா, மனைவி சிஜி, மகள் சீமா, மகன் ஆதிதேவ் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அதிகாலையில் நன்கு தூங்கி கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் மண் சரிவு ஏற்பட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.
இதனால் தூங்கிய நிலையிலேயே மண்ணுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்களது வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்ணை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் சோமனின் தாய் தங்கம்மா, மகள் சீமா, மகன் ஆதிதேவா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களது உடல்களை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய இருவரின் நிலை குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. திடீர் மண் சரிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.