யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழருக்கு இனப் பிரச்சனை என்பதே இல்லை என்கிற போது இந்தியா ஏன் தலையிட வேண்டும் என்று இலங்கை அமைச்சரும் சீனாவின் ஆதரவாளருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது: ஈழத் தமிழ் மக்களுக்கு இன ரீதியான பிரச்னைகள் இலங்கையில் இருப்பதாக நான் கருதவில்லை. நியாயமான பிரச்னைகள் இருந்தால் அவற்றுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் போது இலங்கை ராணுவத்தினருக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும்.
மனித உரிமைகள் உள்ளிட்டவைகளை தமிழ் அரசியல் கட்சிகள்தான் பேசி பேசி பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றன. இலங்கை தமிழ் ஊடகங்களும் மக்களிடம் சரியான தகவல்களை சேர்க்கவில்லை. இலங்கையில் இப்போது இனப்பிரச்சனை என்பதே கிடையாது. இலங்கையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை. அதிகாரப் பகிர்வுகளுக்கு இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபை முறைமையை முழுமையாக சிறந்த தீர்வாக அமையும்.
இலங்கையில் யுத்த காலத்தில் மரணித்த அனைவரையும் நினைவுகூர பொதுவான ஒரு நாள், பொதுவான இடம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் யுத்த காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்யலாம். உரிய இறப்புச் சான்றிதழ்களை வழங்கலாம். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
ஈழத் தமிழர் பிரச்சனையை மையமாக வைத்த் 1989-ல் இந்தியா- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி ஈழத் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் என்பது ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால் சீனா ஆதரவாளராக உருமாறிவிட்ட டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்; ஈழத் தமிழ் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.