ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 6 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கட்ச தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்துவந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஒரு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 6 மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடிக்கபட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து மன்னர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர்.
இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கும் அலுவலகத்தில் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் சிறைபிடிக்க பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், 2018-க்கு பிறகு சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த வேலை நிறுத்த போராட்டமானது இன்று காலை தொடங்கியது. இந்த போராட்டம் காரணாமாக 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியுள்ளனர். ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான அனைத்து விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே ராமேஸ்வர மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.