தைபே: தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் சீனா போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருப்பதால் அப்பிராந்தியத்தில் உச்சகட்ட போர் பதற்றம் உருவாகியுள்ளது.
தைவான் நாடு தம்மை உண்மையான சீனா என்கிறது. ஆனால் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சர்வதேச விவகாரங்களில் 1970களில் கூட தைவான் தான் உண்மையான சீனா என அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிந்தைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறின.
சீனாவைப் பொறுத்தவரை ஒற்றை சீனா என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது. இதில் தைவானும் தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் உலக நாடுகள் இதனை ஏற்க மறுத்து வருகின்றன. இதனால் தைவானை முன்வைத்து சர்வதேச அரசியலில் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி திடீரென தைவானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனை சீனா மிக கடுமையாக எதிர்த்தது. உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட ஒற்றை சீனா கோட்பாட்டுக்கு இது எதிரானது என சீனா, அமெரிக்காவை கண்டித்தது. அத்துடன் தைவான் ஜலசந்தியில் மிக தீவிரமான யுத்த பயிற்சிகளை மேற்கொண்டு மிரட்டல் விடுத்தது சீனா. இந்த யுத்த பயிற்சியில் சீனாவின் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் ஈடுபட்டன. மேலும் நீண்ட தூரம் இலக்குகளை சென்று தாக்கும் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன.
தற்போது 160 கி.மீ. அகலம் கொண்ட தைவான் ஜலசந்தி யுத்த களமாக உருமாறி நிற்கிறது. தைவான் ஜலசந்தியில் சீனா, அமெரிக்கா போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ளன. இதனை வழக்கமான நடவடிக்கை என்கிறது அமெரிக்கா. இது தொடர்பாக அமெரிக்கா கடற்படை வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச கடற்பகுதியில் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் அமெரிக்காவின்ஏவுகணைகள் தாங்கிய யு.எஸ்.எஸ். ஆன்டிடம், யு.எஸ்.எஸ். சான்ஸ்லர்ஸ்வில்லே ஆகிய போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாக சென்றன என கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் போக்குவரத்தை கண்காணித்து கொண்டிருக்கிறோம் என்கிறது சீனா.
இதனிடையே தங்களது நாட்டை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் சீனா தொடர்ந்து ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என தைவான் அரசு பகிரங்கமாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.