புதுடெல்லி,
மாலத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இன்று புதுடெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையின் நிதி நெருக்கடி மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக உள்ள மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இந்தியா குறித்து அளித்த பேட்டியில் பேசியதாவது:-
இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை சிலர் மாலத்தீவு மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இது ஒன்றும் இல்லாத ஒரு குழுவினரால் தொடங்கப்பட்ட பிரச்சாரம். அவர்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சி கொள்கை எதுவும் இல்லை.அவர்களின் கொள்கை வெறுப்பு, இதைத்தான் அவர்கள் மாலத்தீவு மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள்.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியா உலகின் மருந்தாளுனராக திகழ்கிறது. பல நாடுகளை அணுகி உதவுகிறது. அண்டை நாடுகள் மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்கா, பசிபிக் வரையிலும் இந்தியா சென்றடைந்துள்ளது. இந்தியா உண்மையாகவே கருணையின் முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.
பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஒரு வருடத்தில், இந்த செயல்முறையை துரிதப்படுத்த உறுப்பு நாடுகளுக்கு நான் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளேன். ஏனெனில் உலகின் தற்போதைய புவிசார் அரசியலை பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்க வேண்டும். இல்லவிட்டால் இந்த உறுப்பின் நம்பகத்தன்மை தொடர்ந்து தோல்வியடையும்.
பயங்கரவாதம் ஆபத்தான ஒன்று. அதற்கு மதம் இல்லை. அதை எதிர்த்து ஒன்றிணைந்து உலகம் போராட வேண்டும்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்த்து கொள்வது குறித்து தன்னால் உறுதியாக எதையும் சொல்ல முடியாது என்று கூறினார்.