லக்னோ,
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் மல்யுத்த அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி லக்னோவில் உள்ள சாய் மையத்தில் நேற்று நடந்தது.
இதில் 53 கிலோ எடைப்பிரிவில் அரியானாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் 7-0 என்ற புள்ளி கணக்கில் சமீபத்தில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சக மாநிலத்தவரான அன்டிம் பன்ஹாலை தோற்கடித்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இதேபோல் அன்குஷ் (50 கிலோ), சுஷ்மா ஷோகீன் (55 கிலோ), சரிதா மோர் (57 கிலோ), மான்சி அஷ்லாவாத் (59 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), ஷிபாலி (65 கிலோ), நிஷா தாஹியா (68 கிலோ), ரீதிகா (72 கிலோ), பிரியங்கா (76 கிலோ) ஆகியோர் தங்கள் உடல் எடைப்பிரிவில் வெற்றி பெற்று உலக போட்டிக்கான இந்திய பெண்கள் மல்யுத்த அணிக்கு தேர்வாகினர்.