உ.பி: ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை – பாஜக பிரமுகர் வீட்டிலிருந்தது கண்டுபிடிப்பு

கடந்த வாரம் உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை ஒருநபர் தூக்கிச் சென்றார். தற்போது அந்த குழந்தை பாஜக கார்ப்பரேட்டரின் வீட்டிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலைய மேடையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை, அந்த வழியாக பேண்ட் – சட்டை அணிந்து ‘டிப்டாப்’பாக வந்த நபர் ஒருவர் அக்கம்பக்கம் நோட்டமிட்டு, அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார். சிறிதுநேரத்தில் அந்த தாய் எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த தனது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையை தூக்கிச்செல்லும் வீடியோ ரயில் பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை திருடி சென்றவரை தேடி வருகின்றனர். மேலும் குழந்தையை கடத்திச் சென்றவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், அந்நபர் பற்றிய தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
image
இதனையடுத்து தற்போது அந்த குழந்தை மதுரா ரயில்நிலையத்திலிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள ஃபிரோசாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக பாஜகவைச் சேர்ந்த வினிதா அகர்வால் மற்றும் அவரது கணவர் இருவரும் ரூ.1.8 லட்சம் கொடுத்து இரண்டு மருத்துவர்களிடமிருந்து குழந்தையை வாங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண்குழந்தை இருக்கிறது. கடத்தலில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஒரு பெரிய கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குழந்தையை எடுத்தபோது சிசிடிவி கேமிராவில் பதிவான நபர் உட்பட இந்தக் கடத்திலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 7 மாத குழந்தை கடத்தல் – டிப் டாப் நபரை தேடும் போலீஸ்!
மதுராவில் ரயில்வே காவல்துறை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், ஒரு காட்சியில் போலீசார் குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்கின்றார். மற்றொரு காட்சியில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளை கைதான மருத்துவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதுகுறித்து தலைமை காவல் அதிகாரி முகமது முஸ்தாக் கூறுகையில், பணத்துக்காக கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
image
அவர் அளித்த பேட்டியில், ‘’தீப்குமார் என்ற நபர் குழந்தையை எடுத்துள்ளார். ஹத்ராஸ் மாவட்டத்தில் மருத்துவமனை வைத்து நடத்துகிற இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவில் தீப்குமாரும் ஒருவர். குழந்தையை கண்டுபிடித்த வீட்டிலுள்ளவர்களிடம் விசாரித்தோம். அவர்களுக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். ஆண்குழந்தை வேண்டுமென மருத்துவர்களுடன் இந்த ஒப்பந்தத்தில் இறங்கியிருக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இதுவரை பாஜக தரப்பிலிருந்தோ அல்லது கைதான குடும்பத்தாரிடமிருந்தோ எந்த அணுகலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.