ஒட்டாவோ: கனடா நாட்டின் மார்க்கம் நகரில் உள்ள தெருவிற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆஸ்கர் , கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி உலகளவில் தமிழகம் குறித்து பேச வைக்கப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அண்மையில் இணைப்பு மொழி ஆங்கிலம் என மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்னதை அடுத்து அவருக்கு பதிலடி தரும் வகையில் இணைப்பு மொழி தமிழ்தான் என பெருமை பொங்க சொல்லியவர். இவர் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
ஏ.ஆர். ரஹ்மான்
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் சேவைகளை பாராட்டி கனடா நாட்டில் ஒரு தெருவிற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதை நா் வாழ்நாளில் நினைத்து கூட பார்த்ததில்லை. கனடாவின் மார்க்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டிக்கும் , கவுன்சிலர்களுக்கும், இந்திய தூதர் அபூர்வா ஸ்ரீவத்ஸவாவிற்கும் கனடா மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இரக்கம்
ஏ.ஆர். ரஹ்மான் என்பது நான் இல்லை. அதன் அர்ததம் இரக்கம் உள்ளவர் என்பதாலும் பொதுவான கடவுளின் குணம் இரக்கம் ஆகும். அது நம் அனைவரிடத்திலும் உள்ளது. எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவர்களின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
இந்தியா
இந்த பேரன்பிற்கு இந்தியாவை சேர்ந்த சகோதரர், சகோதரிகளுக்கு நன்றி. எனது முயற்சிகள் வெற்றியடைய என்னுடன் பணியாற்றியவர்கள் எனக்கு ஊக்கமளித்தார்கள். அது போல் சினிமாவின் நூறாண்டுகளை கொண்டாடவும் எழுச்சி பெறவும் பழம்பெரும் ஜாம்பவான்கள் உத்வேகத்தை அளித்தார்கள்.
கடலில் சிறிய துளி
கடலில் நான் ஒரு சிறிய துளி. சோர்வடையாமல் ஓய்வு பெறாமல் இன்னும் பலவற்றைச் செய்வதற்கும் ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு பொறுப்பை கொடுத்திருப்பதாகவே உணர்கிறேன். ஒரு நான் சோர்வடைந்தாலும் நான் இன்னும் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்வேன். இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வேன் என தெரிவித்துள்ளார் ரஹ்மான் .