ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 12 ஆம் வகுப்பு படிக்கும் 19 வயது இளம்பெண் ஒருவர் 90 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
என்ன நடந்தது
ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண் ஒருவர் அங்கு பிளஸ் 2 படித்து வந்தார். அந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவன் காதலிப்பதாகத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளான். 10 நாட்களுக்கு முன்பு, இளம் பெண்ணை தொடர்பு கொண்ட அந்த இளைஞன் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் எனக் கூறி உள்ளான். இதற்கு அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அவன், தன்னுடன் பேசாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் அந்த பெண் இது தொடர்பாகத் தனது தந்தையிடம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்த இளைஞனின் குடும்பத்தினரிடம் பேசுவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்று உள்ளனர்.
தீ வைப்பு
பெற்றோர் ஒரு அறையில் தூங்கிக் கொண்டு இருக்க, மற்றொரு அறையில் அந்த பெண் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயம் ஜன்னல் வழியாக பெட்ரோலை அந்த பெண் மீது ஊற்றிய அவன், தீயைப் பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுப் பதறிய பெற்றோர், தீயை அணைத்தனர். மேலும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் 90% தீக்காயங்கள் உடன் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம் பெண் நேற்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
தடை உத்தரவு
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அபிஷேக் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தும்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
சிரித்துக் கொண்டே
தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ள நிலையில், அபிஷேக் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே போலீசார் அவனை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது, அந்த நபர் சிரித்துக் கொண்டே செல்லும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அபிஷேக், கைவிலங்கிடப்பட்டு, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும்போது, அலட்சியமாகச் சிரித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. இதை இணையத்தில் பலரும் மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.