ஜார்க்கண்ட் மாநிலம், தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ஷாருக் என்ற இளைஞர், அந்த மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மாணவி அவருடைய காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர், மாணவிமீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அதையடுத்து, உடலில் தீ பரவி வலியில் அலறி துடித்த அந்த மாணவியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். சில தினங்களாக உடலில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அந்தப் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் குற்றம் செய்த வாலிபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என போராடினார்கள். இதையடுத்து, ஷாருக் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்து போலீஸ் காவலில் வைப்பதற்காக அழைத்துச் செல்லும்போது எந்த மனவருத்தமும் இல்லாமல் சிரித்துக்கொண்டே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.