ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியைப் பார்க்க நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியை விடுதி அறையில் டி.வி.யில் கும்பலாக பார்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி) அறிவித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் போட்டி தொடர்பான கருத்துகளை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்தவிதமான சமூக வலை தளங்களிலும் மாணவர்கள் பதிவிடக் கூடாது என்று என்ஐடி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி கருத்துகளைப் பதிவிட்டாலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நேரத்தில் மாணவர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் ஒழுங்கீனச் செயலில் ஈடுபடக்கூடாது என என்ஐடி தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு எச்சரிக்கை: உத்தரவை மீறி செயல்படும் மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.