கிணத்தை காணோம் பாணியில் செல்போன் டவரையே தூக்கிய கும்பல்: விசாரணையில் வெளியான பகீர் தகவல்

வாழப்பாடி அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் டவரை நூதன முறையில் திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது இடத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க அப்பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து இருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் பத்து பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பாதுகாவலரிடம் சில ஆவணங்களை காட்டி இந்த செல்போன் டவர் செயல்படாமல் உள்ளது. எனவே இதை கழற்றி வேறு இடத்தில் அமைக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
image
பின்னர் அந்த கும்பல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் டவரை முழுவதுமாக கழற்றிச் சென்றுள்ளனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் செல்போன் டவரில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு செல்போன் டவர் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சேலத்தைச் சேர்ந்த செல்போன் டவர் பராமரிப்பு மேலாளர் தமிழரசன் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து (35) வாழப்பாடி காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சர்மா (38) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (33) ஆகிய மூவருடன் பத்து பேர் கொண்ட கும்பல் திருடி ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.
image
இதனையடுத்து மூவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், மேட்டுப்பட்டியில் திருடப்பட்ட செல்போன் டவரின் பாகங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நூதன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.